ஆஸி., ஏ அணி அதிரடி: இந்தியா ஏ தோல்வி
by CricketArchive


Scorecard:India A v Australia A
Event:International A Team Tri-Series 2008/09

DateLine: 17th September 2008

 

ஹைதராபாத், செப். 16: லூக் ரோஞ்சி அசத்தல் சதம் விளாச ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி, இந்திய ‘ஏ’ அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மழை காரணமாக வி.ஜே.டி. விதிமுறைப்படி முடிவு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியா, ஆஸ்திரேலிய, நியூசிலாந்து‘ஏ’ அணிகள் மோதும் முத்தரப்பு தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா ‘ஏ’, ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிகள் பலப்பரீட்சையில் இறங்கின.

 

பூவா தலையா வென்ற இந்திய ஏ அணியின் கேப்டன் பத்ரிநாத் முதலில் பேட்டிங் செய்வதாகக் கூறினார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய‘ஏ’ அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

 

ஆஸ்திரேலிய வீரர்களான ஷான் டெய்ட், ஆஸ்லே நோப்கே ஆகியோரின் பந்து வீச்சில் இந்திய வீரர்கள் சரண்டைந்தனர். ராபின் உத்தப்பா 2 ரன்களும், ரெய்னா 0 ரன்களும், கேப்டன் பத்ரிநாத் 1 ரன்களும் எடுத்திருந்த நிலையில் ஷான் டெய்ட்டின் வேகப்பந்து வீச்சிற்கு பலியாயினர். ரோகித் சர்மா 15 ரன்களும், தினேஷ் கார்த்திக் 12 ரன்களும் எடுத்திருந்த நிலையில் ஆஸ்லே நோப்கேயின் வேகப்பந்து வீச்சிற்கு பலியாயினர்.

 

துவக்க வீரராக களமிறங்கிய ஸ்வப்னில் அஸ்நோத்கர் சற்று தாக்குப் பிடித்து ஆடி 23 ரன்கள் எடுத்தார். இவரை நோப்கே ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.

 

இதனால் இந்திய ஏ அணி 67 ரன்களை சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அணி 150 ரன்களைத் தாண்டுமா என சந்தேகம் எழுந்தது. இதன் பின்னர் யூசுப் பதானுடன் அபிஷேக் நாயர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவுக்கு நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தியது.

 

அபிஷேக் நாயர் 30 ரன்கள் எடுத்து நோப்கே பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிலைத்து ஆடிய யூசுப் பதான் அரைசதம் கடந்தார். அவர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். பியூஸ் சாவ்லா 12 ரன்களும், பிரவீண் குமார் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

 

முடிவில் இந்திய ‘ஏ’ அணி 49.4 ஓவரில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியில் நோப்கே 4 விக்கெட்டுகளையும், ஷான் டெய்ட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

சுலப இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய‘ஏ’ அணி வீரர்கள், இந்திய பந்து வீச்சை விளாசித்தள்ளினர். வாணவேடிக்கை காட்டிய லூக் ரோஞ்சி 71 பந்துகளில் சதம் கடந்தார். 27 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்திருந்தபோது பலத்த மழை பெய்தது. பொறுத்திருந்த பார்த்த நடுவர்கள், ஆட்டத்தை தொடர முடியாத நிலையை உணர்ந்து வி.ஜே.டி. விதிமுறைப்படி முடிவை ஆறிவித்தனர்.

 

இதையடுத்து உள்ளூர் போட்டிகளில் பின்பற்றப்படும் வி.ஜே.டி., முறைப்படி (டக்வொர்த்-லீவிஸ் விதிமுறை போல) ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.

 

லூக் ரோஞ்சி 79 பந்துகளில் 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 13 பந்துகள் பவுண்டரிகளாகவும், 3 பந்துகள் சிக்ஸர்களாகவும் பறந்தன. இவர், ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

-----------

 

வி.ஜே.டி. முறை என்றால் ஏன்ன?

 

இயற்கையின் இடையூறு காரணமாக சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்படும்போது "டக்வொர்த்-லீவிஸ்' தோழர்கள் வகுத்த விதிமுறைப்படி முடிவு காணப்படுகிறது. அதுபோல உள்ளூர் போட்டிகள் இடையில் பாதிக்கப்படுமேயானால், கேரளத்தைச் சேர்ந்த பொறியாளர் வி. ஜெயதேவன் (வி.ஜே.டி) உருவாக்கியுள்ள விதிமுறையின் படி ஆட்டத்தின் முடிவு காண பயன்படுத்தப்படுகிறது.