பிரெட் லீ
by CricketArchive


Player:B Lee

DateLine: 6th September 2008

 

முழுப்பெயர்: பிரெட் லீ

 

பிறப்பு: 8 நவம்பர் 1976, வொல்லாங்காங், நியூ சவுத்வேல்ஸ், ஆஸ்திரேலியா.

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

பந்து வீச்சு முறை: வலதுகை வேகப்பந்து வீச்சாளர்

 

அணியில் வீரரின் நிலை: பந்து வீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: ஆஸ்திரேலியா, நியூ சவுத்வேல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

 

உறவினர்: ஷேன் லீ (அண்ணன்)

 

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: டிசம்பர் 26-30, 1999 அன்று ஆஸ்திரேலியா - இந்தியா இடையே மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி
ஒருதினப் போட்டி: ஜனவரி 9, 2000 அன்று ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையே பிரிஸ்பேனில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி:
பிப்ரவரி 17, 2005 அன்று ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே ஆக்லாந்தில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்து வீச்சாளர். ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சாளர். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ரத்தின் ஓய்விற்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் பிரதான பந்துவீச்சாளராக மாறியவர். அவர் இருக்கும் போதே அவருக்கு இணையாக பந்து வீசுவதில் வல்லவர் பிரெட் லீ. இவரது அண்ணன் ஷேன் லீயும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரராவார்.

 

'பந்தை எறிகிறார், வேண்டுமென்றே பேட்ஸ்மேன் தலைக்கு பந்தை வீசுகிறார்' என பல குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டன. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம், போட்டியின் போது அடிக்கடி ஏற்படும் காயம் என இவர் பல போராட்டங்களை சந்தித்த பிறகே அணியில் நிலை பெற ஆரம்பித்தார்.

 

இவருக்கும், பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் சோயிப் அக்தருக்கும் இடையே இன்று வரை யார் அதிக வேகத்தில் பந்துவீசுகிறார்கள் என்ற போட்டி நிலவி வருகிறது எனலாம். இவர் மணிக்கு 100 mph வேகத்தில் பந்துவீசுகிறார் என்று எண்ணும் அளவிற்கு வேகமாக பந்து வீசுவதில் திறமையானவர் பிரெட் லீ.

 

இந்தியாவிற்கெதிராக மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அறிமுகமான முதல் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது வரவை சர்வதேச அரங்கில் அழுத்தமாக பதித்தார்.

 

இவர் விளையாடிய முதல் 7 டெஸ்ட் போட்டிகளில் 42 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 2001-ம் ஆண்டு இவருக்கு மோசமாக அமைந்தது. மோசமான பார்ம் காரணமாக இவ்வருடத்தின் கடைசியில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இவரால் இடம்பெறமுடியவில்லை. குதிகால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் அணியில் சேர்க்கப்படாமல் இருந்தார். இதனால் பல தொடர்களை இழந்தார். இக்காயத்திலிருந்து மீண்ட இவர் உள்ளூர் போட்டிகளில் மீண்டும் விளையாடினார். அதில் சிறப்பாக ஆடியதால், மீண்டும் சர்வதேச அணியில் சேர்க்கப்பட்டார்.

 

2003-ம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தி, இவரது அணி கோப்பையை வெல்வதற்கு உதவினார்.

 

2005-ல் நடைபெற்ற ஆஷஸ் தொடருக்கான அணியில் இடம்பிடித்து அசத்தலாக விளையாடினார். பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினார். இத்தொடரின்போது எட்க்பாஸ்டனில் நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி, இரண்டாவது இன்னிங்ஸில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் எடுத்தார். இத்தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி 158 ரன்களையும் குவித்தார்.

 

இவரது அணியின் வேகப்பந்துவீச்சாளரான கிளென் மெக்ரத் ஒய்விற்கு பிறகு, இவர் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளராக மாறினார். அணியின் பந்துவீசும் பொறுப்பு இவர் தோளில் விழுந்தது. அணியில் புதிதாக வரும் இளம்பந்து வீச்சாளர்களுக்கு மூத்தவீரராக வழிகாட்டி வருகிறார்.

 

ஆஸ்திரேலிய ஒருதின கிரிக்கெட் வரலாற்றில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார் பிரெட் லீ. முதல் இடத்தில் 381 விக்கெட்டுகளுடன் மெக்ரத் உள்ளார்.

 

ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களான கிளென் மெக்ரத்தும், ஷேன் வார்னேவும் ஓய்வு பெற்ற பிறகு, அணியில் அவர்கள் இல்லாத குறையை, தனது திறமையான பந்துவீச்சால் நிவர்த்தி செய்து, அணியில் நிலையான இடத்தை பிடித்துள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.

 

இவரது திறமைக்கு பரிசாக, '2006-ம் ஆண்டின் சிறந்த வீரர்' என்று விஸ்டன் பத்திரிகை விருது இவருக்கு கிடைத்தது. 2008ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் என்ற விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

வெளியான தேதி: 04.09.08