Player: | K Weeraratne |
முழுப்பெயர்: கௌசல்ய வீரரத்னே
 
பிறப்பு: 29 ஜனவரி 1981. கம்போலா, இலங்கை. 
மட்டை வீச்சு முறை: இடதுகை ஆட்டக்காரர் 
அணியில் வீரரின் நிலை: பந்துவீச்சாளர் 
பந்து வீச்சு முறை: வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளர் 
விளையாடிய அணிகள்: இலங்கை, கண்டுரட்டா அணி, கோல்ட்ஸ் கிரிக்கெட் கிளப், புளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் தடகள கிளப் அணி, நொண்டேஸ்கிரிப்ட் கிரிக்கெட் கிளப், ராகமா கிரிக்கெட் கிளப். 
அறிமுகம்: 
டெஸ்ட் போட்டி: இன்னும் அறிமுகமாகவில்லை 
இலங்கை அணியின் வளர்ந்து வரும் மிதவேகப்பந்து வீச்சாளர். வரும்காலத்தில் இலங்கை அணியின் ஆல்ரவுண்டராகத் திகழக் கூடியவர். இலங்கையிலுள்ள கம்போலாவில் பிறந்து வளர்ந்தவர். 
1999 காலகட்டத்தில் முதல் தரப்போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். 2000- த்தில் நடைபெற்ற 19 வயதிற்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில், விளையாடிய இலங்கை அணியில் இடம்பிடித்து விளையாடினார். இத்தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
இதன்பயனாக 2000-ல் இலங்கை அணித் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். இதே வருடத்தில் நடைபெற்ற ஆசியக்கோப்பைக்கான ஒருதின அணியில் இடம்பிடித்தார். அதன்படி மே 29, 2000 அன்று இலங்கை - வங்கதேசம் இடையே டாக்காவில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில், முதன்முதலாக சர்வதேச அளவில் அறிமுகமானார். இத்தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
2003-ல், இலங்கையில் நடைபெற்ற முத்தரப்புத் தொடருக்கான அணியில் இடம்பிடித்திருந்தார். இதில் பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் விளையாடும் போது காயமடைந்தார். இது இவர் ஆடிய 11வது ஒருதினப் போட்டியாகும். இவரது மோசமான பார்ம் காரணமாகவும், காயம் காரணமாகவும் அணியில் நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. இதனால் சுமார் ஐந்து வருடங்கள் அணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். 
இதையடுத்து அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்கு கடுமையாக போராடினார். கடுமையாக பயிற்சி செய்தார். உள்ளூர் போட்டிகளில் ஆக்ரோஷமாக விளையாடினார். 
உள்ளூர் அணியான ராகமா அணியில் இவர் விளையாடினார். 2005-ல் குருநேகலா யூத் கிரிக்கெட் கிளப் அணிக்கெதிரான உள்ளூர் போட்டியில் அதிரடி ஆட்டத்தை காண்பித்தார். 12 பந்துகளில் 7 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரிகள் உள்பட 50 ரன்கள் குவித்தார். மேலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 18 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 66 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். முதல்தர உள்ளூர்ப் போட்டிகளில் இந்த அதிரடி அரைசதம் ஒரு சாதனையாக அமைந்தது. 
இப்படி உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக 2008-ல் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்த அணியில் இடம்பிடித்து விளையாடினார். அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரிலும் இடம்பிடித்து விளையாடினார். 
இதையடுத்து இந்திய அணியுடன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரில் இடம் பிடித்துள்ளார். 
வெளியான தேதி: 23 ஆகஸ்டு 2008.