3-வது போட்டி: இந்தியா அசத்தல் வெற்றி
by CricketArchive


Scorecard:Sri Lanka v India
Player:DPMD Jayawardene, MS Dhoni
Event:India in Sri Lanka 2008

DateLine: 25th August 2008

 

கொழும்பு பிரேமதேசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருதினப் போட்டியில் இலங்கை அணியை, இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.

 

இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடுகிறது. டெஸ்ட் தொதரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. ஒருதினத்தொடரின் முதல் போட்டியில் இலங்கையும், அடுத்ததில் இந்தியாவும் வெற்றி பெற, தொடர் 1-1 என்ற சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று கொழும்புவில், பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.

 

இரண்டாவது ஒருதினப் போட்டியில் விளையாடிய இர்பான் பதான் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கௌதம் காம்பீர், காயம் முழுமையாக குணமடைந்ததால் இப்போட்டியில் சேர்க்கப்பட்டார்.

 

பூவா தலையா வென்ற வென்ற இந்திய அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

 

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக கௌதம் காம்பீரும், விராட் கோஹ்லியும் வந்தனர். சிறப்பாக ஆடிய விராட் கோஹ்லி 25 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதற்கடுத்த ஓவரில், மிகவும் நிதானமாக ஆடிய கௌதம் காம்பீர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

இவர்களையடுத்து யுவராஜ்சிங்கும், சுரேஷ் ரெய்னாவும் ஜோடி சேர்ந்தனர். குலசேகரா வீசிய பந்தில் ஒரு சிக்ஸர் அடித்த யுவராஜ்சிங், அவர் வீசிய அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இவரது கணக்கில் 12 ரன்கள் அடங்கும்.

 

இவரையடுத்து வந்த சுப்ரமணியம் பத்ரிநாத் 6 ரன்கள் எடுத்திருந்த போது மெண்டிஸ் சுழலில் வெளியேற, இந்தியா 91 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து திணறியது.

 

இந்நிலையில் களமிறங்கிய கேப்டன் மஹந்திரங் தோனி, சுரேஷ் ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரெய்னா, மெண்டிஸ் பந்து வீச்சில் ஒரு இமாலய சிக்சர் அடித்து மிரட்டினார். தொடர்ந்து ஆடிய இவர், ஒரு நாள் போட்டிகளில் 6வது அரைசதம் கடந்தார். ஒரு சிக்சர், 4 பவுண்டரிகள் உள்பட 53 ரன்கள் எடுத்தநிலையில் எதிர்பாராதவிதமாக இவர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

 

அடுத்து வந்த ரோஹித் சர்மா, பொறுப்புணர்ந்து, நிதானமாகவும், அதே சமயத்தில் அதிரடியாகவும் ஒத்துழைப்பு தர, தோனி விளாசத் துவங்கினார். அதிரடியாக விளையாடிய தோனி, ஒரு நாள் போட்டிகளில் 23வது அரைசதம் கடந்தார். ரோஹித் சர்மா 32 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து 80 பந்துகளில் 8 பவுண்டரிகள் உள்பட 76 ரன்கள் எடுத்திருந்த தோனியும் ஆட்டமிழந்தார்.

 

முடிவில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது.

 

இலங்கை அணி தரப்பில் அஜந்தா மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும், நுவன் குலசேகரா, திலன் துஷாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணிக்கு சனத் ஜெயசூர்யாவும், சங்ககாராவும் சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க முனைந்தனர். ஆனால் அம்முயற்சியை பிரவீண்குமாரும், ஜாகீர்கானும் சிதைத்தனர்.

 

பிரவீண் குமார் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறிய ஜெயசூர்யா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். சங்ககரா 9 ரன்கள் எடுத்திருந்த போது ஜாகீர்கான் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினார்.

 

அடுத்து வந்த கபுகேதரா 12 ரன்கள் எடுத்திருந்த போது, பிரவீண் குமார் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேற, அடுத்து வந்த சமரசில்வா 1 ரன்னில், ஜாகீர்கான் பந்துவீச்சில் வெளியேற இலங்கை அணி 40 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

 

ஒருபறம் இலங்கை அணியின் கேப்டன் மஹேல ஜெயவர்தனே நிற்க, மறுபுறம் வந்த வீரர்கள் மீண்டும் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

 

ஜெயவர்தனேவுடன், ஆறாவது வீரராக களமிறங்கிய தில்ஷான் 16 ரன்களில், முனாப் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்துவந்த சமிந்தா வாஸ் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஹர்பஜன்சிங் பந்துவீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். இவரையடுத்துவந்த குலசேகரா தன்பங்கிற்கு 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 

அப்போது, இலங்கை அணி 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, பரிதாபமாக காட்சியளித்தது. எப்படியும் 150-ற்குள் இலங்கை அணி சுருண்டுவிடும் என்று நினைத்த இந்திய ரசிகர்களுக்கு, ஜெயவர்தனே-திலன் துஷாரா ஜோடி ஆட்டம் பயத்தை ஏற்படுத்தியது.

 

8வது விக்கெட்டுக்கு களமிறங்கிய திலன் துஷாரா, ஜெயவர்தனேவுடன் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி இலங்கை அணியை வெற்றி பெற வைத்துவிடுமோ என்றிருந்த நிலையில், திலன் துஷாரா 30 ரன்கள் எடுத்திருந்தபோது ஜாகீர்கான் பந்து வீச்சில் வெளியேறினார்.

 

ஒரு முனையில் வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் கேப்டன் ஜெயவர்தனே, தனி ஆளாக நின்று அணியை காப்பாற்ற போராடினார். ஆனால், அவரது முயற்சியை முனாப் படேல் தகர்த்தார். அவர் 94 ரன்கள் எடுத்திருந்தபோது, முனாப் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வெற்றி இந்திய அணியின் கைக்கு வந்தது.

 

49வது ஓவர் வரை போராடிய இலங்கை அணி, 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

 

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜாகீர்கான், முனாப் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பிரவீண் குமார் 2 விக்கெட்டுகளையும், ஹர்பஜன்சிங், யுவராஜ்சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

 

இந்திய அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 4வது ஒருதின ஆட்டம், இதே மைதானத்தில் நாளை, பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.