சனத் ஜெயசூர்யா
by CricketArchive


Player:ST Jayasuriya

DateLine: 21st August 2008

 

முழுப்பெயர்: சனத் தேரன் ஜெயசூர்யா

 

பிறப்பு: 30 ஜூன் 1969. மாத்தறை, இலங்கை.

 

மட்டை வீச்சு முறை: இடதுகை ஆட்டக்காரர்

 

அணியில் வீரரின் நிலை: ஆல்ரவுண்டர்

 

பந்து வீச்சு முறை: இடதுகை சுழற்பந்து வீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: இலங்கை, ஆசிய லெவன், புளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் தடகள கிளப் அணி, ருஹுனா அணி, கொழும்பு கிரிக்கெட் சங்க அணி, மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப், மும்பை இந்தியன்ஸ், சாமர்செட் அணி.

 

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: பிப்ரவரி 22-26, 1991 அன்று இலங்கை - நியூசிலாந்து இடையே ஹாமில்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி
ஒருதினப் போட்டி: டிசம்பர் 26, 1989 அன்று இலங்கை - ஆஸ்திரேலியா இடையே மெல்போர்னில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: செப்டம்பர் 2, 2004 அன்று புளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் தடகள கிளப் அணி - குருநேகலே யூத் கிரிக்கெட் கிளப் இடையே கொழும்புவில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

இலங்கை அணியின் அதிரடி முன்னணி ஆட்டக்காரர்களில் ஒருவர். இலங்கை அணியின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் தனியிடம் பிடித்துள்ளவர். சிறந்த இடதுகை ஆல்ரவுண்டர். இடதுகை துவக்க வீரர். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன். 10000 ரன்கள் கடந்த முதல் இலங்கை வீரர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

 

மாத்தறை சென் சவ்தியாஸ் கல்லூரியில் கல்வி கற்ற இவர், புளூம்பீல்ட் அணி சார்பாக முதல்தரப் போட்டிகளில் ஆடத் தொடங்கினார். இதனையடுத்து டிசம்பர் 26, 1989 அன்று இலங்கை - ஆஸ்திரேலியா இடையே மெல்போர்னில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில், சர்வதேச அளவில் முதன்முதலாக அறிமுகமானார்.

 

அதுமுதல் இலங்கை அணியின் நடுவரிசை ஆட்டக்காரராக இருந்தார். பின்னாளில், இவரது அதிரடி ஆட்டம் காரணமாக இலங்கை அணியின் துவக்க ஆட்டகாரராக மாறினார்.

 

1996 உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கு கோப்பையை பெற்றுத்தந்ததில் இவரது பங்களிப்பு மிக அதிகம். இத்தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 2 அரை சதங்கள் உள்பட 221 ரன்கள் எடுத்தார். மேலும் இந்தியா-இலங்கை இடையே நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு காரணமாயிருந்தார்.

 

1997-ல் இந்தியாவிற்கு எதிராக கொழும்புவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 340 ரன்கள் குவித்து அசத்தினார். இது இலங்கை வீரர் ஒருவர் டெஸ்ட் அரங்கில் அடித்த அதிகபட்ச ரன்களாகும்.

 

பேட்டிங்திறமையில் மட்டுமல்ல, சுழற்பந்துவீச்சிலும் தான் திறமையானவர் என்பதை நிரூபித்தவர். இலங்கை அணி இக்கட்டான தருணங்களில் இருக்கும் போதெல்லாம் எப்படி தனது பேட்டிங்கால் கை கொடுக்கிறாரோ, அதுபோல பந்துவீச்சிலும் கைகொடுப்பவர். ஒருதின அரங்கில் 300க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் அரங்கில் 98 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 

இவரது திறமையான ஆட்டத்தின் பலனாக அர்ஜுன ரணதுங்காவிற்கு பிறகு 1999 முதல் 2003 வரை இலங்கை அணியின் கேப்டனாக பொறுப்பேற்று அணியை திறம்பட வழி நடத்தினார்.

 

இவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்பதால், இவரது முக்கிய சாதனைகளை மட்டும் பார்க்கலாம். ஒரு தின அரங்கில் 12,000 ரன்களைத் தண்டிய இரண்டாவது வீரர், (இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர் 16361 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்). இலங்கை அணியின் முதல் வீரர். உலக அளவில் அதிகளவு (418) ஒருதினப் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர். ஒரு தின அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் 9 வது இடத்திலுள்ளவர் என சொல்லிக் கொண்டே போகலாம்.

 

2007-ல், மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இவர் கலந்து கொண்டபோது இவருக்கு வயது 38. இத்தொடரில் 467 ரன்கள் குவித்தார். இதையடுத்து தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய அதிக வயதான வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

 

2007 டிசம்பர் 1-5 வரை இங்கிலாந்திற்கு எதிராக கண்டியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதில் இவர் 76 ரன்கள் எடுத்தார். இப்போட்டியோடு இவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒருதினத் தொடரில் இவர் விலக்கி வைக்கப்பட்டார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். இதில் 14 போட்டிகளில் விளையாடி 1 சதம், 2 அரைசதம் உள்பட 514 ரன்கள் குவித்தார். மேலும், இத்தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 3 வது இடத்தைப் பிடித்தார். இதையடுத்து இலங்கையின் விளையாட்டுத் துறை அமைச்சர் இவரை இலங்கைக்கான ஒருதின அணியில் சேர்த்துக்கொள்ளும்படி பரிந்துரைத்தார்.

 

இதையடுத்து இந்திய அணியுடன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரிலும், செப்டம்பரில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடரிலும் இடம் பிடித்துள்ளார்.

 

இவரது திறமைக்கு மகுடம் சூட்டும் வகையில் 1997 ஆண்டிற்கான விஸ்டன் பத்திரிகை விருதும், 1996-ல் சிறந்த ஆட்டக்காரர் என்ற இந்திய கிரிக்கெட் அமைப்பாலும் தேர்வு செய்யப்பட்டவர்.

 

வெளியான தேதி: 20. ஆகஸ்டு 2008.