ஆசியக் கோப்பையை வெல்லப்போவது யார்?
by CricketArchive


Event:Asia Cup 2008

DateLine: 5th July 2008

 

வணக்கம்

 

பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் மோதுகின்றன. இப்போட்டி, நாளை கராச்சியிலுள்ள நேஷனல் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.

 

இத்தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் வீரேந்திர ஷேவாக், கௌதம் காம்பீர் அதிரடி துவக்கம் தந்திருக்கிறார்கள். இப்போட்டியிலும், இது தொடர்ந்தால் இந்திய அணி 350 ரன்களுக்கு மேல் சுலபமாக பெறலாம்.

 

நடுவரிசையில் சுரேஷ் ரெய்னா அதிரடி காட்டுகிறார். தோனி, யுவராஜ் இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர். ரோஹித் சர்மா, ராபின் உத்தப்பா இருவரும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். இப்போட்டியில் அவர்களது திறமையை நிரூபித்தாக வேண்டும். வலுவான இந்திய பேட்டிங் வரிசை அசத்தும் பட்சத்தில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும்.

 

பந்துவீச்சுதான் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இர்பான் பதான், பிரவீண்குமார், இஷாந்த் சர்மா, மன்பிரீத் கோனி உள்ளிட்ட வேகங்கள் அதிகளவில் ரன்களை விட்டுக் கொடுக்கின்றனர். பியுஸ் சாவ்லா பரவாயில்லை. கடந்த இரு ஆட்டங்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறினர்.

 

இப்போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். இத்தொடரில் இதுவரை 300 ரன்கள் என்பது சுலபமான இலக்காக போய்விட்டது. அந்த அளவிற்கு பந்துவீச்சு மோசமாக உள்ளது. வீரர்கள் தங்களது தவறுகளை திருத்திக் கொண்டு இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசினால் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

 

இலங்கை அணியிலும் இந்திய அணிக்கு சவாலான வீரர்களே உள்ளனர். அதிரடி துவக்கத்திற்கு சனத் ஜெயசூர்யாவும், குமார் சங்ககாராவும் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து ஜெயவர்தனே, கபுகேதரா, சமரசில்வா என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. பந்து வீச்சில் சமிந்தா வாஸ், தில்ஹாரா பெர்ணான்டோ, முத்தையா முரளிதரன். அஜந்தா மெண்டிஸ் உள்ளனர். இவர்களை இந்திய வீரர்கள் சமாளித்தால் போதும்.

 

இந்திய அணியும் இலங்கை அணியும் முதன் முதலாக 1975-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் மோதின. அப்போட்டியில் இலங்கை அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இக்காலகட்டத்தில்தான் இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்தது என்பது குறிப்பிடத் தக்கது.

 

இந்திய அணியும் இலங்கை அணியும் இதுவரை 100 ஒருதினப்போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்திய அணி 52 ஆட்டங்களிலும், இலங்கை அணி 38 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டங்கள் கைவிடப்பட்டன.

 

இதுவரை நடைபெற்று வந்த ஆசியக் கோப்பை தொடர்களில் இந்திய அணி 32 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 19 வெற்றிகளையும், 11 தோல்விகளையும் பெற்றுள்ளது. 1 போட்டி டை ஆனது.

 

அதேபோல் இலங்கை அணி இதுவரை நடைபெற்று வந்த ஆசியக் கோப்பை தொடரில் 35 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 25 வெற்றிகளையும், 10 தோல்விகளையும் பெற்றுள்ளது.

 

ஆசியக் கோப்பை போட்டிகளில் இதுவரை இந்திய அணியும், இலங்கை அணியும் நேருக்குநேர் மோதிய போட்டிகள் 14 ஆகும். அதில் இரு அணிகளும் தலா 7 முறை வெற்றி பெற்று சம பலத்துடன் காட்சியளிக்கிறன.

 

இதுவரை நடைபெற்று வந்த ஆசியக் கோப்பை தொடர்களில் இரு அணிகளும் ஆறாவது முறையாக இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன. இதற்கு முன்பு நடைபெற்ற 5 இறுதிப் போட்டிகளில் இந்திய அணி 3 முறையும், இலங்கை அணி 2 முறையும் கோப்பையை வென்றுள்ளன.

 

1984 முதல் 2004 வரை 8 முறை ஆசியக் கோப்பைத் தொடர் நடைபெற்றுள்ளது. அதில் 1984 -ல் நடைபெற்ற முதல் ஆசியக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. இதன் பிறகு 1988, 1990, 1994 என மொத்தம் நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. இலங்கை அணி 1986, 1997, 2004 என மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. இதில் 1986-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இந்திய அணி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

 

இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 5 வது முறையாக கோப்பையை கைப்பற்றும் அணி என்ற பெருமையை பெறும். மாறாக இலங்கை அணி வெற்றி பெற்றால் 4 முறை கோப்பையை வென்றுள்ள அணி என்ற இந்திய அணியின் சாதனையை சமன் செய்துவிடும்.

 

இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பை தொடர்களில் இந்திய அணி, ஹாங்காங் அணிக்கு எதிராக 374 ரன்கள் பதிவு செய்தது. இதுவே ஆசிய கோப்பை வரலாற்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.

 

இலங்கை அணிக்கு எதிராக இந்திய வீரர் மஹேந்திரசிங் தோனி அதிகபட்ச ரன்கள் எடுத்தவர் ஆவார். இவர் 2005/2006-ல், ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் ஆட்டமிழக்காமல் 183 ரன்கள் எடுத்தார். 1999-ல், டான்டனில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் சௌரவ் கங்குலி 183 ரன்கள் குவித்தார்.

 

இந்தியாவிற்கு எதிராக இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா, 2000/2001-ல், சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் அதிகபட்சமாக 189 ரன்கள் குவித்தார்.

 

இலங்கைக்கு எதிராக இந்திய வீரர் ஆஷிஷ் நெஹ்ரா 2005-ல், கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் 59 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாகும்.

 

இந்தியாவிற்கு எதிராக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 2000/2001-ல், சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் 30 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாகும்.

 

நன்றி, வணக்கம்.