Scorecard: | Sri Lanka v United Arab Emirates |
Player: | BAW Mendis |
Event: | Asia Cup 2008 |
போட்டி: 50 ஓவர்கள் போட்டி (பகலிரவுப் போட்டி)
 
வணக்கம்
 
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர்-4 சுற்றுக்கு தகுதிபெற்றது. 
இன்று பிற்பகல் லாகூரில் நடைபெற்ற ஏ பிரிவு தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை அணியும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியும் மோதின. 
பூவா தலையா வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க வீரர் சங்ககாரா முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார். கேப்டன் ஜெயவர்த்தனே அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 9 பவுண்டரிகள் உள்பட 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர், இப்போட்டியில் தனது 45-வது அரைசதத்தைக் கடந்தார். இவரை தொடர்ந்து வந்த கபுகேதரா 11 ரன்களுடனும், சமரசில்வா 6 ரன்களுடனும் வெளியேற இலங்கை அணியின் ரன்விகிதம் குறைந்தது. 
பொறுப்புடன் ஆடிய உடாவாட்டே 74 பந்துகளில் 6 பவுண்டரிகள் உள்பட 67 ரன்கள் எடுத்தார். இவர், இப்போட்டியில் தனது இரண்டாவது அரைசதத்தைக் கடந்தார். பின்னர் வந்த தில்ஷான் 24 ரன்களும், வீரரத்னே 40 ரன்களும், குலசேகரா 38 ரன்களும் சேர்த்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்தது. 
இதையடுத்து, கடின இலக்கை எட்ட முனைந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு துவக்க வீரர் அம்ஜத் அலி நம்பிக்கை தந்தார். முதல் ஓவரில் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் அடித்து இலங்கை அணியை மிரட்டினார். 
படுவிடாராச்சி 14 ரன்களில் மிரண்டோ பந்தில் வெளியேறினார். பின்னர் கேப்டன் சாகிப் அலியுடன் ஜோடி சேர்ந்த அம்ஜத் அலி, 79 பந்துகளில் 12 பவுண்டரிகள் உள்பட 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர், இப்போட்டியில் தனது முதலாவது அரைசதத்தைக் கடந்தார். இவர் விளையாடிய ஒரு தினப் போட்டிகளில் இதுவே இவர் அடித்த அதிகபட்ச ரன்களாகவும் அமைந்தது. 
அடுத்து வந்த வீரர்களை இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் சொற்ப ரன்களில் வெளியேற்ற, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி, 36.3 ஓவர்களில் 148 ரன்களுக்குள் சுருண்டது. 
இலங்கை சார்பில் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் 6.3 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே, இவர் விளையாடிய ஒரு தினப் போட்டிகளில் சிறந்து பந்து வீச்சாக அமைந்தது. இவரே ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். 
இப்போட்டியில் இலங்கை அணி சார்பில் 22 பவுண்டரிகளும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி சார்பில் 16 பவுண்டரிகளும் அடிக்கப்பட்டன. ஆயினும், இரு அணியைச் சேர்ந்த வீரர்கள் எவரும் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
நன்றி, வணக்கம்.